தமிழகம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 4 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு: தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் அளவு குறைந்துள்ளது. மொத்த கொள்ளளவில் 4.42 சதவீதம் நீர் மட்டுமே தற்போது உள்ளது.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குபவை பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம் பாக்கம் ஏரிகள் ஆகும். இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டிஎம்சி. இவற்றில் நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் அளவு தற்போது குறைந்துள்ளது.

ஆகஸ்ட் 29-ம் தேதி என்ற அடிப்படையில் பார்த்தால், 2005-ல் 0.653 டிஎம்சி, 2006-ல் 3.657 டிஎம்சி, 2007-ல் 3.998 டிஎம்சி, 2008-ல் 4.160 டிஎம்சி, 2009-ல் 2.395 டிஎம்சி, 2010-ல் 4.686 டிஎம்சி, 2011-ல் 7.214 டிஎம்சி, 2012-ல் 3.500 டிஎம்சி, 2013-ல் 1.289 டிஎம்சி, 2014-ல் 2.097 டிஎம்சி நீர் இருந்துள்ளது.

ஆனால் தற்போது பூண்டியில் 0.059 டிஎம்சி, செங்குன்றத்தில் 0.256 டிஎம்சி, செம்பரம்பாக்கத்தில் 0.174 டிஎம்சி (சோழவரத்தில் மிகமிக சொற்பம்) என ஒட்டுமொத்தமாக 0.489 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. இது 4.42 சதவீத நீர் இருப்பாகும்.

சென்னைக்கு தென்மேற்கு பருவகாலத்தைவிட வடகிழக்கு பருவகாலத்தில்தான் அதிக மழை கிடைக்கும். வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது.

இந்நிலையில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நிலத்தடி நீரை எடுத்து குடிநீர் வாரியம் விநியோகித்து வருகிறது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து 90 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. மேலும் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீருக் கான ஆதாரங்களும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிலத்தடி நீரையே நம்பியுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் விவசாயக் கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீர் மூலமாக கண்டிப்பாக இன்னும் ஒரு மாதத்துக்கு சமாளிக்க முடியும். அதன் பிறகு பருவமழை தொடங்கிவிடும். எனவே, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது’’ என்றனர்.

SCROLL FOR NEXT