தமிழகம்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அளவில் பாதுகாப்பு குழு அமைக்க முதல்வரிடம் லதா ரஜினி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், மாநிலஅளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தியதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டது. ஆழ்துளை கிணறு மட்டுமின்றி, மேலும் பல ஆபத்துகள் குழந்தைகளுக்கு உள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் நம்மை நம்பித்தான் உள்ளனர். காலை முதல் மாலை வரை அவர்களை கண்காணிக்க வேண்டியது நமது கடமை.

பெரியவர்களுக்கு என அரசில் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால், குழந்தைகளுக்கு என ஒரு துறை மட்டுமே உள்ளது. இது போதுமானதல்ல. எனவே, அவர்களை பாதுகாக்க மாநில அளவில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் எனபல்துறை நிபுணர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழுவை உருவாக்குவது குறித்து முதல்வரிடம் வலியுறுத்தினேன். நான் கூறியதை முதல்வர் பொறுமையுடன் கேட்டதுடன், விரைவில் இதுதொடர்பாக அரசு நல்ல முடிவை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

குழந்தைகள் பாதுகாப்பை பொறுத்தவரை தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உதவி எண்கள் உட்பட பல்வேறு வசதிகள் இருந்தாலும், மாநில அளவில் குழு அமைக்க வேண்டியது தற்காலத்தில் அவசியமாகி இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT