பொள்ளாச்சி
பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சக்தி எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் தீபக் (25). வடமாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிஷா (2) . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், 5 மாத கர்ப்பமாக இருந்த மனைவி சீதாமுனி (23) என்பவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை சரியான வளர்ச்சி இல்லாததால் அவருக்கு கருக்கலைப்பு செய்து, உள்நோயாளியாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை நிஷாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்த தீபக் மது அருந்தியுள்ளார். பின்னர் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குழந்தை நிஷாவுடன் நின்று கொண்டிருந்தவர், போதையில் குழந்தையை பேருந்து நிலையத்திலேயே விட்டு விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து கழிவறைக்கு சென்று தாளிட்டு கொண்டு போதையில் தூங்கியுள்ளார். 2 மணி நேரத்துக்கு பின்னர் விழித்து எழுந்தவர் குழந்தையை தேடியுள்ளார். இதற்கிடையில் பேருந்து நிலையத்தில் 2 வயது குழந்தை நீண்ட நேரம் தனியாக இருப்பதை கண்ட பொதுமக்கள் பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் வைரம் குழந்தையை மீட்டு பொள்ளாச்சியில் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் குழந்தை தொலைந்து விட்டதாக புகார் தெரிவித்த தீபக்கிடம் குழந்தை மீட்கப்பட்டது குறித்த தகவலை போலீஸார் தெரிவித்துள்ளார்.
காப்பகத்திலிருந்து குழந்தையை கொண்டு வந்த போலீஸார் தீபக்கிடம் ஒப்படைத்தனர். மதுவினால் மகளை தொலைத்த தீபக்கிடம் போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.