தஞ்சாவூர்
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் நவ. 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலச் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கூட்டுறவுத் துறை நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்குத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம், பணிவரன்முறை, தனித்துறை என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
இதன் விளைவாகத் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்து, இக்கோரிக்கைகளை பரிசீலனை செய்ய உத்தரவிட்டது. இக்குழு சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 20 கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பிவைத்தது. இதில், அதிக செலவில்லாத 11 கோரிக்கைகளைப் பரிசீலித்து கூட்டுறவுத் துறைநிர்வாக அறிவிப்பில் வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை.
எனவே, அக்.17-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், எங்களை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே, அடுத்த கட்டமாக ஏற்கெனவே திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நவ.11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குழு அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.