ரஜினி கூறிய வெற்றிடத்தை எப்போதோ ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இன்று (நவம்பர் 8) காலை சென்னையில் கமல் அலுவலகத்தில் நடைபெற்ற, மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவுடன், தன் வீட்டு வாசலிலிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி.
அப்போது "திருவள்ளுவர் மீதும், தன் மீதும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அவரும் சிக்கமாட்டார். நானும் சிக்கமாட்டேன். தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது” என்று பேசினார் ரஜினி. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ரஜினியின் கருத்துகள் குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், "நீண்ட படப்பிடிப்பில் இருக்கின்ற காரணத்தால் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை, அரசியல் ரஜினிக்கு சரியாகத் தெரியவில்லை. நேரடியாக அரசியலுக்கு வந்தால், ரஜினி கூறிய வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி நீண்ட காலமாகிவிட்டதைப் புரிந்து கொள்வார்.
தன் மீதான சாயம் பூசுவது குறித்த பேச்சு எல்லாம் அவருடைய கருத்து. அவர் மீது யார் காவி சாயம் பூசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் யாருக்குப் பதில் சொல்லியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார் துரைமுருகன்.