காவி சாயம் மற்றும் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளிட்ட ரஜினியின் கருத்துகளுக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று (நவம்பர் 8) காலை சென்னையில் கமல் அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவுடன், தன் வீட்டு வாசலிலிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது "திருவள்ளுவர் மீதும், தன் மீதும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அவரும் சிக்கமாட்டார். நானும் சிக்கமாட்டேன்” என்று ரஜினி பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "தன்னுடைய நிலை குறித்து ரஜினிகாந்த் விளக்கம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் ஒரு பிரபலமான நடிகர். அவரைப் பயன்படுத்த பாஜக ஆசைப்படலாம். அது குறித்து நான் கருத்து கூற முடியாது. அந்த ஆசையைப் பொறுத்தவரையில், பாஜக பல்வேறு காலகட்டங்களில் கருத்துகளைச் சொல்லியிருக்கலாம். ஆனால் பாஜக கூறும் கருத்துகள் குறித்து ரஜினிகாந்த்தான் பதிலளிக்க வேண்டும். வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. இன்று அவர் தனது நிலையை தெளிவுபடுத்திவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாவது முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது ரஜினி, "தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னும் இருக்கிறது" என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்து தொடர்பாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "அம்மா என்பவர் ஒரு இமயமலை. இமயமலையோடு யாருமே ஒப்பிட முடியாது. உலக அளவில் ஒப்பிட முடியாத ஒரு தலைவராக இருக்கிறார். அவருடைய இழப்பு ஒரு வெற்றிடம்தான். அந்த வெற்றிடம் எவ்வாறு நிரப்பப்படுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இருவருடைய எண்ணமும் கட்சியும், ஆட்சியும் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த எண்ணம் இன்று நிறைவேற்றப்படுகிறது. அப்படியென்றால் வெற்றிடத்துக்கு வாய்ப்பில்லையே. மக்களுடைய தீர்ப்பு எங்கள் பக்கம் இருக்கும் போது வெற்றிடம் என்பது இல்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டு, ஆட்சியை இழந்திருந்தால் வெற்றிடம் என்பது இருந்திருக்கும். அப்படியிருந்தால் ரஜினி சொல்வது சரி. ஆனால், ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்சியைக் காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். 2 தொகுதி தேர்தலின் வெற்றியே இதனை நிரூபித்துவிட்டது" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.