சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது மதுவிலக்கை அமல்படுத்திட வலியுறுத்தி சசி பெருமாள் குடும்பத்தினர் நேற்று ஒருநாள் அடையாள உண்ணா விரதம் இருந்தனர்.
மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. வரும் செப்டம்பர் 29-ம் தேதி வரை பேரவை நடக்கும் என அறிவிக் கப்பட்டுள்ளது. தற்போதைய கூட்டத் தொடரில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று காந்தியவாதி சசிபெருமாளின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதை வலியுறுத்தி சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த இ.மேட்டுக்காட்டில் உள்ள சசிபெரு மாளின் சமாதி முன்பு அவரது குடும் பத்தினர் நேற்று ஒருநாள் அடை யாள உண்ணாவிரதம் இருந்தனர். இதில், சசிபெருமாளின் மனைவி மகிளம், மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி, சகோதரர்கள் வெங்கடாஜலம், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து சசிபெருமாளின் மகன் விவேக் கூறியதாவது: பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு போராட் டங்களை நடத்திய எனது தந்தை கன்னியாகுமரி மாவட்டத்தில், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியு றுத்தி நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், மதுவிலக்கை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இதன்படி, அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டி, பூரண மதுவிலக்கு வேண்டி நாங் கள் குடும்பத்துடன் பல்வேறு கட்டப் போராட்டங்களை அஹிம்சை முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக அரசு நல்ல தகவலை அறிவிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.