தமிழகம்

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை: அமைச்சர்கள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர்செல்லூர் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்திட முதல்வர் உத்தரவிட்டதனைத் தொடர்ந்து, 4.11.2019 மற்றும் 6.11.2019 ஆகிய தினங்களில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் மூலம் தரமான வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்வோர் பயன்பெறும் வகையில், வெளிச்சந்தை விலையை விட குறைவாக, ஒரு கிலோ ரூ.30/- மற்றும் ரூ.40/-க்கு தமிழ்நாட்டில் செயல்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக இன்று முதல் விற்பனை செய்யப்படும்.

அரசின் இந்நடவடிக்கையினால் வெங்காயத்தின் விலை உயர்வானது கட்டுக்குள் கொண்டுவரப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT