புதுச்சேரி
முதல்வர், அமைச்சர் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு எந்தத் தகவலும் இல்லை. இது மாநிலப் பாதுகாப்பின் நலனுக்காக இம்முறை மத்திய அரசிடம் புகார் தரும் நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளேன் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோரைச் சந்தித்து புதுச்சேரியில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவா எம்எல்ஏ ஆகியோர் சிங்கப்பூருக்கு கடந்த 6-ம் தேதி சென்றனர். 4 நாட்கள் அங்கு தங்கி தொழில்முனைவோர்களைச் சந்தித்து வருகின்றனர். இது அரசு முறைப் பயணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சூழலில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இது முதல்வரின் அரசு முறைப் பயணம் அல்ல. தனிப்பட்ட பயணம்தான் என்று முதல்வர் அலுவலக அதிகாரபூர்வ தகவல் வெளியீட்டை ஆதாரமாகக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கிரண்பேடி வெளியிட்டுள்ள கருத்து.
முதல்வர் நாராயணசாமி வெளிநாடு சென்றுள்ளார். தற்போது அவர் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ளதாகத் தெரிவிக்கிறார். தனிப்பட்ட பயணத்தின் போது அரசு வேலைகளைச் செய்வது மட்டுமில்லாமல் அதன் விவரங்கள் அவருக்கு மட்டுமே தெரிந்தவை. இந்திய அரசு விதிப்படி கடல் தாண்டிய வெளிநாட்டுப் பயணத்துக்கு துறைத்தலைவரிடமோ, ஜனாதிபதியிடமோ முன் அனுமதி பெற வேண்டும்.
குறிப்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அடிக்கடி இலங்கைக்குப் பயணிக்கிறார். அவரின் நிலையும் இதேபோல்தான் உள்ளது. முதல்வர், அமைச்சர்கள் எத்தனை முறை உரிய அனுமதி பெற்றனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
அமைச்சர் மல்லாடியின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக இந்திய அரசு ஏற்கெனவே விவரங்கள் கோரியுள்ளது. எந்தவொரு முன் அனுமதியும் இல்லாமல் அதிகாரி வெளிநாடு சென்றிருந்தால், ஒழுக்கமற்ற செயலாகக் கருதப்பட்டு அவர் மீது பெரும் தண்டனை விதிக்கப்படும்.
குறிப்பாக முதல்வர், அமைச்சர்கள் வெளிநாடு பயணம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு எந்தத் தகவலும் இல்லை. இது மாநில பாதுகாப்பின் நலனுக்காக இம்முறை மத்திய அரசிடம் புகார் தரும் நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளேன். வெளிநாட்டுப் பயணத்தின்போது அவர்களை வழிநடத்துவோர், நிதியளிப்போர் விவரங்களை இந்திய அரசு அறிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.