அமைச்சர் ஜெயக்குமார் - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

ஸ்டாலின் மிசாவில் கைதானதற்கான குறிப்புகள் எங்கும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

செய்திப்பிரிவு

சென்னை

மிசாவில் ஸ்டாலின் கைதானதற்கான குறிப்புகள் எங்கும் இல்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அமைச்சர் பாண்டியராஜனை எதிர்த்து, திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள்," என விமர்சித்திருந்தார்.

ஸ்டாலினின் விமர்சனத்துக்குப் பதில் தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று (நவ.8) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மிசா குறித்து அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும் மு.க.ஸ்டாலின் பெயர் இல்லை. இரா.செழியன் எழுதிய புத்தகத்தில் ஸ்டாலின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. அவரது பெயர் இஸ்மாயில் கமிஷனிலும் கிடையாது. ஷா கமிஷனிலும் கிடையாது. இரா.செழியன் எம்.பி.யாக இருந்த காலத்தில், மிசா காலக் கொடுமைகள் குறித்து எழுதிய புத்தகத்தில், ஸ்டாலின் கைதானதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT