திருப்பூர்
திருப்பூரில் பெய்த கன மழையால் பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியதுடன், குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கிய மழை, அவ்வப்போது இடைவெளி விட்டு தொடர்ந்து பெய்கிறது. குறிப்பாக, கடந்த 2-ம் தேதி முதல் அடுத்தடுத்து கன மழை பெய்துள்ளது. 2-ம் தேதி இரவு முதல் 3-ம் தேதி காலை வரை 34.40 மி.மீ., 3-ம் தேதி இரவு தொடங்கி 4-ம் தேதி காலை வரை 73 மி.மீ. மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் கன மழை பெய்தது. மொத்தமாக 122.50 மி.மீ. அளவுக்கு பதிவானது.
இதில், திருப்பூர் மாநகர பகுதிகளில் பெய்த மழையால் அவிநாசி சாலை காந்தி நகர், அனுப்பர்பாளையம், தண்ணீர் பந்தல் சந்திப்பு பகுதிகளில், முழங் கால் அளவுக்கு சாலையில் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்றதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது. தண்ணீருக்குள் செல்ல முடியாமல், பலர் இருசக்கர வாகனங்களை தள்ளியவாறு சென்றனர். இதே போல் பி.என்.சாலை, காங்கயம், தாராபுரம் சாலைகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மும் மூர்த்தி நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களின் போது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்படுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹார்வி சாலை சிட்கோ பகுதியில் தொழில் நிறுவனங்களுக்குள் தண் ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.
நேற்றும் கனமழை
திருப்பூர் மாநகரில் நேற்று மாலை கன மழை பெய்ததால், பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் வழிந்தோடியது. தாழ்வான பகுதி களில் வெள்ள நீர் புகுந்தது. அவி நாசி, ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளிலும் கன மழை பெய்தது.