தருமபுரி
தருமபுரி நகரில், பிடமனேரி சிக்னல் பகுதியில் ஒருவழிப் பாதையில் நுழையும் வாகனங்களைக் கட்டுப்ப டுத்த, மழையிலும் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
தருமபுரி நகரின் மையப் பகுதியான 4 ரோடு பகுதியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை வரையிலான பகுதி நேதாஜி பைபாஸ் சாலை என்று அழைக்கப்படும். இந்த சாலையில் இருந்து பிடமனேரிக்கு சாலை பிரியும் இடத்தில் 4 சாலைகள் சந்திக்கின்றன. எனவே, இப்பகுதியில் காவல்துறை மூலம் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போக்கு வரத்தை நெறிப்படுத்தும் பணியில் போலீ ஸாரும் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
குறிப்பாக, இப்பகுதியில் ஒருவழிப் பாதையில் ஏராளமான வாகன ஓட்டிகள் நுழைந்து போக்குவரத்தை சீர்குலைப்பதுடன், விபத்துக்கும் காரணமாக அமைகின்றனர். இந்த சிக்னலில் பணியமர்த்தப்படும் போலீஸார், இவ்வாறு ஒருவழிப் பாதையில் நுழைபவர்களை கட்டுப்படுத்த தினமும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
நேற்று இந்த சிக்னலில், தொப்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரவிச்சந்திரன் என்ற உதவி ஆய்வாளர் பணியமர்த்தப்பட்டிருந்தார். நேற்று மாலை 4.30 மணியளவில் தருமபுரி நகரில் திடீரென மழை பெய்தது. சற்று நேரம் கனமாக பெய்த மழை, பின்னர் நீண்ட நேரம் மிதமாக தூறிக் கொண்டிருந்தது. பள்ளிகள் முடிந்து சாலையில் அதிக போக்குவரத்து நிலவும் அந்த நேரத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றால் ஒருவழிப் பாதைக்குள் பலரும் நுழைந்து விடுவர். இதை கருத்தில் கொண்டு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மழை கோட்டும், தலைக்கவசமும் அணிந்தபடி தூறலிலேயே நின்று கொண்டு போக்குவரத்தை நெறிப்படுத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, ஒருவழிப் பாதையில் நுழைய முயன்றவர்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.
சீரான மற்றும் விபத்து அச்சம் இல்லாத போக்குவரத்து சூழலுக்காக, மழையிலும் பணியாற்றிய உதவி ஆய்வாளரை சாலை விதிகளை பின் பற்றும் வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டிச் சென்றனர்.