சென்னை
முரசொலி நிலத்தின் மூலப் பத்திரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போது வெளியிடுவார் என்று தமிழகமே காத்திருக்கிறது என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:‘முரசொலி’ நாளிதழ் அலுவலக நிலம் குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘திமுகவின் அறைகூவலுக்கு பாமகவிடம் இருந்து பதில் வரவில்லை’ என்று கூறியுள்ளார்.
முரசொலி நில சர்ச்சை எழுந்தது முதல் இன்று வரை பாமகவும், ராமதாஸும் எழுப்பும் வினாக்கள் மிகவும் எளிமையானவை. முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல. அது தனியார் பட்டா நிலம் என்றால், அதற்குரிய ஆவணங்களான நிலப்பதிவு பத்திரங்கள், 1924-ம் ஆண்டின் யுடிஆர் ஆவணங்கள் எங்கே? அரசு ஆதிதிராவிட மாணவர்கள் நல விடுதி அமைந்திருந்த இடம் முரசொலிக்கு கைமாறியது எப்படி என்பனதான் அந்த வினாக்கள். அதற்கு இதுவரை பதில் இல்லை.
பொதுவாழ்விலும், நீதிமன்றத் திலும் குற்றம் சுமத்தியவர்தான் அதை நிரூபிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்படியானால், முரசொலி நிலம் குறித்து ட்விட்டரில் ராமதாஸ் பதிவிட்ட 24 மணி நேரத்தில் பட்டாவை ஸ்டாலின் வெளியிட்டது ஏன்? முரசொலி நிலம் குறித்த பட்டாவை வெளியிட்டவர், மூலப் பத்திரத்தை வெளியிடாதது ஏன் என்று ராமதாஸ் கேள்வி கேட்டு 20 நாட்களாகிறது.
ஆனாலும் இதுவரை மூலப் பத்திரத்தை வெளியிடவில்லை. 24 மணி நேரத்தில் பட்டா வெளியான நிலையில், 20 நாட்களாகியும் மூலப்பத்திரம் வெளிவரவில்லை. இதிலிருந்தே உண்மை என்ன வென்பது தெரிந்துவிட்டது.
இப்போதும்கூட எந்த ஆணையத்திடம், எப்போது ஆவணங்களை தாக்கல் செய்யப் போகிறார் என்பதை ஸ்டாலின் கூறவில்லை. எனினும், முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை அவர் தாக்கல் செய்யப் போகும் நாள் எந்த நாளோ, அந்த நாளுக்காக தமிழகம் காத்திருக்கிறது. அதுகுறித்த விசாரணையின் முடிவில் முரசொலி நிலம் குறித்த புதிய உண்மைகள்கூட வெளிவரலாம். இவ்வாறு ஜி.கே.மணி கூறியுள்ளார்.