சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நவம்பர் புரட்சி தின விழா நேற்று நடந்தது. இதில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் இரா.நல்லகண்ணு தலைமையில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் செங்கொடியை ஏற்றி வைத்தார். உடன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன். படங்கள்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

பாஜக ஆட்சியால் ஜனநாயகம், சோஷலிசத்துக்கு ஆபத்து: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை

மத்தியில் உள்ள பாஜக ஆட்சியால் ஜனநாயகம், சோஷலிசத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நவம்பர் புரட்சி தின விழா நேற்று நடந்தது. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் இரா.நல்லகண்ணு தலைமையில் நடந்த இந்த விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் செங்கொடியை ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது தா.பாண்டியன் பேசியதாவது: நவம்பர் புரட்சி என்றழைக்கப்படும் ரஷ்ய புரட்சி, உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதியார், பெரியார், சிங்காரவேலர், திருவிக என்று தமிழகத்தில் பலரும் நவம்பர் புரட்சியை வரவேற்றனர். நவம்பர் புரட்சி மூலம் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு விடுதலையும் கிடைத்தது. இன்றைக்கு உலகில் ஜனநாயகம், சோஷலிசம் இருப்பதற்கு நவம்பர் புரட்சியே வித்திட்டது.

இப்போது இந்தியா மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளது. மக்களிடம் மத உணர்வுகளைத் தூண்டி, நாட்டை பிளவுபடுத்தி ஆட்சியை பாஜக தக்க வைத்துள்ளது. இதனால் ஜனநாயகம், சோஷலிசத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. வேலையின்மை, விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் சட்ட அமைப்புகள் சீர்குலைக்கப்படுகின்றன. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எனவே, மோடி அரசை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்கள் உறுதியேற்று செயல்பட வேண்டும் என்று தா.பாண்டியன் கூறினார்.

மார்க்சிஸ்ட் அலுவலகத்தில்..

நவம்பர் புரட்சி தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் செங்கொடியை ஏற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் வரதராஜன், மாநில அலுவலகச் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT