தமிழகம்

கல்பாக்கம் அருகே குண்டுவெடிப்பு: உள்ளூர் மோதலுக்காக தயாரிக்கப்பட்டவையா?

செய்திப்பிரிவு

கல்பாக்கம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்கம் அடுத்த மீனவ கிராமம் பழைய நடுக்குப்பம். இங்கு, நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கட்டுமான பணியில் ஈடுபடுவதில், இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக மீனவர் சங்கம் சார்பில் சமாதான கூட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், கடற்கரையை ஒட்டி அதேபகுதியில் அமைந்துள்ள சவுக்கு தோப்பில் நேற்று 2 வெடிகுண்டுகள் வெடித்தன. சமாதான கூட்டத்தில் வீசுவதற்காக இந்த வெடிகுண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில், செந்தில்குமார், வெங்கடேசன் பலத்த காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் வேலு, மாமல்லபுரம் டிஎஸ்பி மோகன் ஆய்வு நடத்தினர். விபத்தில் சிக்கிய 2 பேரின் கைவிரல்கள் மற்றும் உடல் சதைகளும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. கூவத்தூர் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் தடயங்களை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து, பழைநடுக்குப் பத்தைச் சேர்ந்த கஜேந்திரன் கூறியதாவது: சென்னையை சேர்ந்த ஒருவர் இங்கு நிலம் வாங்கி, அடுக்குமாடி குடியிருப்பு கட்டத் தொடங்கினார். இதே பகுதியைச் சேர்ந்த பொன்னுரங்கம் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் கட்டுமான பணியில் ஈடுபட்டனர். ஆனால், கிராமத்தினர் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரினர்.

இதனால், கேசவன் என்பவருக் கும், பொன்னுரங்கத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், கிராம மக்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் மோதல் நிகழ்ந்தது. இதில், கேசவன் மற்றும் ஏழுமலை ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க நில உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.

இது, பொன்னுரங்கம் தரப்புக்கு பிடிக்காததால் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரிடையே நேற்று சமாதான பேச்சு நடக்க இருந்த நிலையில் குண்டுவெடிப்பு நிகழந்தாக கூறினார்.

இதுகுறித்து, மாமல்லபுரம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் வேலு கூறியதா வது: கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பையில் வெடிகுண்டு இருந்தாலும் அது, வெடிப்பதற்கு வாய்ப்பில்லை. விபத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது வாகன விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்த பின்னரே வெடிகுண்டு விபத்து என கூறியுள்ளனர். கூவத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என்று கூறினார்.

இதுகுறித்து, பேசிய மாமல்லபுரம் டிஎஸ்பி. மோகன், ‘வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே, வெடித்து சிதறியது எந்தவகையைச் சேர்ந்த வெடிகுண்டு என்பது தெரியவரும்’ என்றார்.

SCROLL FOR NEXT