இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலை இலங்கை கடற்படைக்கு இலவசமாக வழங்கியதற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டிவரும் ஈடுபாட்டைப் போற் றும் வகையில், இலங்கைக் கடற்படைக்கு குத்தகை அடிப்ப டையில் சேவையாற்றிவந்த இந்திய கடலோர காவல்படையின் “வராஹா' ரோந்துக் கப்பல், அந்த நாட்டுக்கு கடந்த வியாழக்கிழமை அளிக்கப்பட்டது தமிழக மீனவர் களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் சி.ஆர்.செந்தில்வேல் ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை கடற்படை மனிதாபி மானமற்ற முறையில் தாக்குதல் நடத்தி கடந்த 30 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர் களை கொன்றுள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும்கூட தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய தாக்குதல்கள், விசைப் படகுகளைக் கைப்பற்றுதல், சிறையில் அடைத்தல் ஆகிய அராஜக செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஜனவரியில் இருந்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர் களின் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமலேயே உள் ளன. தற்போது இந்தியா வழங் கியுள்ள வராஹா ரோந்துக் கப்பலை தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும்தான் இலங்கை அரசு பயன்படுத்தப் போகிறது.
தனது சொந்த நாட்டு மீனவர்கள் மீதே தாக்குதல் நடத்துவதற்கு இலங்கை கடற்படைக்கு கப்பல் வழங்கி உள்ளது தமிழக மீனவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வராஹா ரோந்துக் கப்பலை திரும்பப்பெற்று தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டும் என்றார்.