சென்னை
ரயில் நிலையங்கள், ரயில்வே இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட்-அவுட் வைக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளக்ஸ் பேனர்கள் வைப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த பிரபாகர், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:இந்திய ரயில்வேயில் தெற்கு ரயில்வே அதிக வருமானம் ஈட்டுகிறது. தெற்கு ரயில்வேக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பொது இடங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி ரயில் நிலைய வளாகங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்க மற்றும் சுவர் விளம்பரங்களை செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிட்டார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தெற்கு ரயில்வேக்கு சொந்தமான அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே இடங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள், கட் அவுட்கள் வைக்க தடை விதிக்கப்படுகிறது.
ஏற்கெனவே தமிழக அரசு பொது இடங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளது. இந்த தடை ரயில்வே துறைக்கும் பொருந்தும். ரயில் நிலையங்கள், ரயில்கள் பொதுமக்களின் வசதியான பயணத்துக்காகவே உள்ளன. இதனால் பயணிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் செயல்களை அனுமதிக்கக் கூடாது.
இந்த உத்தரவை ரயில்வே தொழிற்சங்கங்களோ, கூட்டமைப்புகளோ, அவற்றின் நிர்வாகிகளோ மீறினால் அவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைத்தால், அவற்றில் இடம் பெற்றுள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை தெற்கு ரயில்வே 3 வாரத்தில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.