திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகத்தினர் மீது முகநூலில் அவதூறு பரப்பியதாகவும், கோயில் நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்பட மக்களைத் தூண்டியதாகவும் கூறி ரங்கராஜன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இணை ஆணையர் புகார்
இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் பொ.ஜெயராமன், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: 2014-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் பட்டர்தோப்பு பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் மகன் ரங்கராஜன் என்பவர் என்னைச் சந்தித்து திருப்பணிகள் குழுவில் தன்னையும், தனக்கு வேண்டிய 4 பேரையும் சேர்க்க வேண்டும் என வற்புறுத்தினார். அவ்வாறு செய்ய முடியாது என கூறிவிட்டேன்.
அதன்பின், ரங்கராஜன் தனது முகநூலில் கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையில் பொய்யான, கற்பனையான விஷயங்களை தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இவர் கடந்த 26.10.2019-ம் தேதி தனது முகநூலில், கோயில் மீது பக்தர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் வகையில், "ஏற்கெனவே பெரிய பெருமாளின் திருமேனியில் இருந்து சாளக்கிராமங்களைத் திருடியவர்கள், நம்பெருமாளை மாற்றித் திருடியவர்கள், கோயிலை சட்டவிரோத அகழ்வாராய்ச்சி செய்து வைர, வைடூரியங்களைத் திருடியவர்கள் இப்போது பல ஆயிரம் வருடங்களாக மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் நித்யசூரியான புராதன விளக்கை திருட முற்படுகின்றனர்" என பதிவிட்டிருந்தார்.
இதேபோல, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரின் அறிக்கைகளின்படி, மாவட்ட வன அலுவலரிடம் மதிப்பைப் பெற்று பொதுஏலம் மூலம் ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக கோயிலைச் சுற்றிலும் 4 உத்திர வீதிகளில் மதில்சுவரையொட்டி வலுவற்ற நிலையில் இருந்த 116 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்தும் இவர், கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்களை தரக்குறைவாக விமர்சித்தும், பக்தர்களிடம் மத உணர்வு மற்றும் மத நம்பிக்கைகளை சீர்குலைத்தும், கோயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட தூண்டும் விதமாகவும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் கருத்துகளைப் பரப்பி வருகிறார். எனவே, அவர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோயில் இணை ஆணையர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 500, 505(2), தகவல் தொழில்நுட்பச் சட்டம்- பிரிவு 45 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரங்கராஜனை நேற்று கைது செய்தனர். ஜாமீனில் விடுதலைகைது செய்யப்பட்ட ரங்கராஜனை நேற்று மாலை திருச்சி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கம் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என ரங்கராஜன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சோமசுந்தரம், ரங்கராஜனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.