கோப்புப்படம் 
தமிழகம்

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் மருத்துவ, விவசாய மாணவிகளுக்கு உதவி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் மருத்துவம் மற்றும் விவசாயம் படிக்கும் மாணவிகளுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்துக்கான தொகையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தலைமைச் செயலகத்தில் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவி ஆ.கீதாஞ்சலி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவி க.அபிநயா ஆகியோருக்கு கல்லூரி விடுதி வாடகை, உணவு கட்டணத் தொகையாக நான்கரை ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல் கடிதங்கள், நடப்பாண்டுக்கான விடுதிக் கட்டணமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதுதவிர, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாண்டு பட்டப்படிப்பு படித்து வரும் லட்சுமி பிரியாவுக்கு கல்விக்கட்டணத் தொகையாக நான்கு ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சத்து 18,200-க்கான ஒப்புதல் கடிதம், நடப்பாண்டு கல்விக் கட்டணம் ரூ.18,600-க்கான காசோலையையும் வழங்கினார்.

விளையாட்டுத் துறைகடந்தாண்டு பெலாரஸ் நாட்டின், மின்ஸ்க் நகரில் நடந்த 4-வது உலகக்கோப்பை டெனிகாய்ட் குழு போட்டியில் ஆடவர் பிரிவில் வெண்கலம் வென்ற இ.அறிவழகன், ஜி.திருஞானம், எஸ்.அபிஷேக் ஆகிய 3 தமிழக வீரர்கள், மகளிர் பிரிவில் வெண்கலம் வென்ற எ.ரம்யா மற்றம் கே.கீர்த்தனா ஆகிய 2 வீராங்கனைகள் ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள், 2018-ம் ஆண்டுக்கான சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற டி.குகேஷ்க்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

மேலும், சென்னையில் தேசிய அளவிலான வளைகோல் பந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகளுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை என ரூ.63 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

மூத்த குடிமக்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் கூடிய வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து, மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, 2018-19 ம் ஆண்டுக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் தமிழகத்துக்கு வழங்கினார். இந்த விருதை, முதல்வரிடம் அமைச்சர் சரோஜா காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வுகளில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலர் கே.சண்முகம், துறை செயலர்கள் தீரஜ்குமார், ஆ.கார்த்திக், எஸ்.மதுமதி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, செங்கல்வராய அறக்கட்டளை தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன், தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலக்கொடைகள் வாரிய தலைவர் ஜி.சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT