தமிழகம்

மேட்டூர் அணை நிரம்பியதால் கடைமடை வரை தண்ணீர் ; 26 லட்சம் ஏக்கரில் சம்பா நடவுப்பணிகள் நிறைவு: உரம் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

டி.செல்வகுமார்

சென்னை

மேட்டூர் அணை 3 முறை நிரம்பி, பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் கடைமடை வரை தண்ணீர் சென்றது. 26 லட்சத்து 33 ஆயிரம் ஏக்கரில் (10.532 ஹெக்டேர்) சம்பா நடவுப்பணிகள் முடிந்துள்ளன.

தமிழ்நாட்டில் 17 லட்சத்து 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இயல்பாக நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கார், குறுவை, சொர்ணவாரி (ஏப்ரல் - ஜூலை), சம்பா, தாளடி, பிசானம் (ஆகஸ்ட் - நவம்பர்), நவரை, கோடை (டிசம்பர் - மார்ச்) ஆகிய 3 பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது. முதல் பருவத்தில் 2.86 லட்சம் ஹெக்டேரிலும் 2-ம் பருவத்தில் 12.69 லட்சம் ஹெக்டேரிலும் 3-ம் பருவத்தில் 2.02 லட்சம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி நடைபெறுகிறது.

இந்தாண்டு குறுவை பருவத்தில் இதுவரை 1.909 லட்சம் ஹெக்டேரிலும் நடப்பு சம்பா பருவத்தில் நவ. 4-ம் தேதி வரை 10.532 லட்சம் ஹெக்டேரிலும் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்டாவில் 4.817 லட்சம் ஹெக்டேரிலும் பிற பகுதிகளில் 5.715 லட்சம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு சம்பா பருவத்தில் இதுவரை 3.855 லட்சம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பும் 6.677 லட்சம் ஹெக்டேரில் நெல் நடவும் முடிந்துள்ளன. இப்பருவத்தில் நேரடி நெல் விதைப்பை ஊக்குவிப்பதற்காக 2 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,500 வீதம் ரூ.33 கோடி உழவு மானியமாகத் தரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மேட்டூர், பவானி சாகர், பாபநாசம் உட்பட 15 அணைகளின் மொத்த கொள்ளளவான 198.384 டிஎம்சி-யில் கடந்த 1-ம் தேதி நிலவரப்படி 173.24 டிஎம்சி நீர் இருப்பு (87 சதவீதம்) உள்ளது. கடந்தாண்டு இதேநாளில் 72 சதவீதம் மட்டுமே இருந்தது. மேட்டூர் அணை இந்தாண்டு 3 முறை நிரம்பியுள்ளது. தற்போதும் 93.47 டிஎம்சி (120 அடி) நீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதேநாளில் 62.33 டிஎம்சி மட்டுமே நீர்இருப்பு இருந்தது.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, “இந்தாண்டு மேட்டூர் அணை 3 முறை நிரம்பி, தேவையான அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்று நடவுப்பணிகள் முடிந்துள்ளன.

மானாவாரி பயிரும் சிறப்பாக இருக்கிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் இருந்து நவம்பர் 15-ம் தேதிக்குள் நெற்பயிருக்கு யூரியா உரம் அவசியம். உரம் தட்டுப்பாட்டால் ஒரு மூடை ரூ.260-க்குப் பதிலாக சில இடங்களில் ரூ.400 வரை விற்கப்படுகிறது. உரத்தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT