சென்னை
விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உதவும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சம்மேளனத்தின் (பிக்கி) தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:வாகன உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதன் மூலம், நாட்டின் வாகன உற்பத்தியின் மையமாக தமிழகம் திகழ்கிறது. அடுத்ததாக விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உதவும். குறிப்பாக, அத்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்படும்.
வாகன உற்பத்தி மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்திக்கு அடுத்தபடியாக பெட்ரோகெமிக்கல் துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட உள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்காக சிப்காட் நிறுவனம் மூலம் 21 தொழிற்பூங்காக்கள் மூலம், தொழிற்சாலைகளின் தேவைக்கான நிலம் வழங்கப்படும். மேலும், சென்னைக்கு அருகில் உள்ள மணலூர், திண்டிவனம் மற்றும் திருச்சியில் உள்ள மணப்பாறை ஆகிய இடங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மின்னணு சாதனங்களின் உதிரி பாகங்களை தயாரிப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. சென்னை - பெங்களூரூ, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். இதன்மூலம், மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். இவ்வாறு சம்பத் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய, இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பத்மஜா சுந்துரு, “நாட்டின் வளர்ச்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அவர்களுக்கு உதவ இந்தியன் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்களின் பெயரில் 60 சதவீதம் ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. சுயஉதவிக் குழு பெண்களுக்கும் வங்கி மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசும்போது, “இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளை மனதில் வைத்து சிந்திக்காததே தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு காரணம். எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல சிந்தனையாளர்கள் தேவைப்படுகின்றனர். அத்துடன், நிலையான வளர்ச்சிக்கு சீரான விதிகளை உருவாக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை இங்குள்ள கலாச்சாரம் மற்றும் அடிப்படை விஷயங்களை மனதில் வைத்து தனி கொள்கையை பின்பற்ற வேண்டும்” என்றார்.
பிக்கி தலைவர் சந்தீப் சோமனி, பிக்கி தமிழக மாநில கவுன்சில் தலைவர் வி.கவிதா தத் உள்ளிட்டோர் பேசினர்.