தமிழகம்

விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை; திருச்சியில் 30 கிலோ தங்கம் சிக்கியது; 130 நபர்களைப் பிடித்து விசாரணை: கடத்தல் கும்பல் கொலை மிரட்டலால் அதிகாரிகள் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

திருச்சி / சென்னை

திருச்சி விமானநிலையத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் வழியாக நேற்று முன்தினம் இரவு மிகப்பெரிய அளவில் தங்கக் கடத்தலில் ஈடுபட ஒரு குழுவினர் திட்ட மிட்டிருப்பதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து டி.ஆர்.ஐ துணை இயக்குநர் பி.கார்த்திகேயன் தலைமையில் உதவி இயக்குநர் சதீஷ் உட்பட சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் இரவு 9.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர்.

அங்கு வெளிநாடுகளில் இருந்து திருச்சி வரும் பயணிகளை சுங்கத் துறையினர் பரிசோதிக்கும் பகுதிக்குச் சென்று, அச்சோதனையை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதன்பின் மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளில், பாஸ்போர்ட் பதிவுகளின் அடிப்படையில் அடிக்கடி வெளிநாடு சென்று வருவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவராக (குருவி) சந்தேகிக்கப்படுவோர் உள்ளிட் டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் தனித்தனியாக பிரித்து சோதனையிட்டனர். அப்போது பலரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர உடலுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 15 பேரை அடை
யாளம் கண்டு, அவர்களை வேன்மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தினர். அங்கு அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய இச்சோதனை விடிய விடிய தொடர்ந்தது. நேற்று பகலிலும் விமான பயணிகளிடம் டி.ஆர்.ஐ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் தங்கம் கடத்தி வந்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், கடத்தல் தங்கத்தை வாங்குவதற்காக விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களையும் டி.ஆர்.ஐ அதிகாரிகள் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல கோடி ரூபாய் மதிப்பு

இந்நிலையில், வருவாய் நுண்ணறிவு பிரிவினர் நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "துபாய், சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த பயணிகளில் 130 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் இருந்து நகைகளாகவும், பேஸ்ட்டுக்குள் மறைத்துத் துகள்களாகவும் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பெரும்பாலானவை, அவர்களின் உடலுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்டவை. இதுதவிர சிகரெட், ஐபோன், ட்ரோன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

கடந்த 17-ம் தேதி மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள வெள்ளையா புரத்தைச் சேர்ந்த அலிபாய்(எ) ராவுத்தர் நைனா முகமது(45) என்பவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை வைத்திருந்தார். அதற்கு சுங்கவரி செலுத்துமாறு விமான நிலைய சுங்க ஆய்வாளர் விஜயகுமார் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பிறகு பணி முடித்து வெளியே வந்த விஜயகுமாரை, ராவுத்தர் நைனா முகமது வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விமான நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து ராவுத்தர் நைனா முகமதுவை கைது செய்தனர். இதற்கு முன்புவரை சுங்கத் துறையினரில் சிலரது உதவியுடனும், அவர்களுக்குத் தெரியாமலும் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல், அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது சுங்கத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்த சோதனை நடைபெற் றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையிலும் தங்கம் கடத்தல்?

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து வந்த விமானப் பயணிகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். இதில் பெண் பயணிகள் பாத்திமா சபீனா, தெரஸா ராமலிங்கம் ஆகியோர் உடலுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்துள்ளதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவர்களை பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுங்கத் துறை பெண் அதிகாரி அம்புஜி உள்ளிட்ட இருவர் அழைத்துச் சென்றனர்.

பரிசோதனை முடிந்து வெளியே வந்தபோது, சுங்க அதிகாரிகளை, ஒரு மர்ம கும்பல் தாக்கி அந்த 2 பெண்களையும் கடத்திச் சென்றதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் தெரிவித்தார். போலீஸார் அங்கு சென்று நடத்திய விசாரணையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே தெரியவில்லை.

இதையடுத்து, அரசு மருத்துவ மனைக்குச் செல்லாமல், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது எதற்காக என பெண் பயணிகளை அழைத்துச் சென்ற சுங்கத் துறை அதிகாரிகளிடமும், அவர்கள் சென்ற காரின் ஓட்டுநரிடமும் அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கடத்திச் செல்லப் பட்டதாக கூறப்பட்ட பெண்களைப் பிடித்து பல்லாவரம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT