தமிழகம்

சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

சென்னையில் உள்ள 12 ஏரிகளை ஆழப்படுத்தி, கொள்ளளவை அதிகரிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்குப் பின் அதிகப்படியான நீர் வெளியேற்றம், ஏரிகளுக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு, நீர்நிலைகளைத் தூர்வாரி பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. நீரைச் சேமிக்க ஏரிகளைத் தூர்வார வேண்டும் என்கிற கருத்தும் பரவலாக எழுந்தது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இல்லாமல் போய், சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதால் நிலத்தடி நீர் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக்கு முன்னரே இயல்பான அளவைவிட பொழிந்த மழை சென்னையின் நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் ஏரிகளை ஆழப்படுத்துவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் ஜெகன்நாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சென்னை மக்கள் பருவமழையும், நிலத்தடி நீரையும் மட்டுமே தண்ணீருக்காக நம்பியுள்ளனர். முந்தைய காலங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது போல எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை ஏற்படாமல் தவிர்க்க நவீன நீர் சேகரிப்பு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

சென்னையில் உள்ள செம்பரபாக்கம், புழல் உள்பட 12 ஏரிகளை 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி, கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல் ஏரிகளில் நீர் பிடிப்பை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு, சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, கொள்ளளவை அதிகரிக்க எடுத்த நடவடிக்கை குறித்து டிசம்பர் 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT