தமிழகம்

கோயம்பேட்டில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ வெள்ளி, ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை

கோயம்பேட்டில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 70 கிலோ வெள்ளி மற்றும் ரூ.4 லட்சம் பணத்தைக் கைப்பற்றி காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு 11 மணி அளவில் கோயம்பேடு ரோந்துப் போலீஸார் கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆட்டோ ஒன்றில் மூன்று நபர்கள் துணிப்பைகளுடன் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் அருகில் சென்ற போலீஸார் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என விசாரணை நடத்தினர். அப்போது 3 பேரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மூவரின் பெயர்கள் சுகுமார் (34), கார்த்திக் (27), மணிகண்டன் (24) எனத் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் சுகுமாரிடம் உள்ள பையில் 20 கிலோ வெள்ளிக்கட்டிகள், கொலுசுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.4 லட்சம் இருந்தது.

கார்த்திக்கை சோதனையிட்டதில் அவரிடம் 20 கிலோ வெள்ளிக்கட்டிகள் இருந்தன. மணிகண்டன் பையைச் சோதனையிட்டதில் 30 கிலோ வெள்ளிக்கட்டிகள் மற்றும் கொலுசுகள் இருந்தன.

மொத்தமாக 70 கிலோ வெள்ளிக்கட்டிகள், ரூ.4 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. அதுகுறித்து போலீஸார் கேட்டபோது சவுகார்பேட்டையில் உள்ள உத்தம் சந்த் என்பவரிடமிருந்து 70 கிலோ எடையுள்ள வெள்ளிக்கட்டிகள், வெள்ளிக் கொலுசுகள் வாங்கிக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர்.

ரூபாய் 4 லட்சம் பணம் குறித்தும் அவர்களிடம் தெளிவான பதில் இல்லை. வெள்ளி மற்றும் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததால் 3 பேரையும் அவர்கள் கொண்டுவந்த பொருட்களுடன் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

SCROLL FOR NEXT