ராமேசுவரம்
அந்தமான் அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
அந்தமான் அருகே நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த சில மணிநேரங்களில் புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரைப் பகுதியை அடையும். இந்தப் புயலால் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நவம்பர் 7, 8 ஆகிய நாட்களில் வங்கக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால் அந்தமான் கடல் பகுதிகள், மத்தியக் கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடற்பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் வங்கக்கடலில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு அரசால் வழங்கபடும் மீன்பிடி அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுவதுடன் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்தது.
மேலும் பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் நாளாக இன்று (நவ.6) ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் கடற்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் மீனவர்கள் தங்களின் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்தனர்.
எஸ். முஹம்மது ராஃபி