சென்னை
அந்தமான் அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த சில மணிநேரங்களில் புயலாக மாறும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
“வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. அந்தமான் அருகே நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த சில மணிநேரங்களில் புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைப் பகுதியை அடையும். இந்தப் புயலின் காரணமாக தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு இல்லை.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 24 டிகிரி செல்சியஸ் பதிவாகும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழைப்பொழிவு இல்லை.
‘மஹா’ - தீவிரப் புயல் - அரபிக்கடல்
‘மஹா’ அதிதீவிரப் புயலானது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து தென் மேற்கே சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை பிற்பகல் குஜராத் கடற்கரைப் பகுதிகள் மற்றும் டையூ அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.