தமிழகம்

ரயில் நிலையங்களில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கத் தடை: தென்னக ரயில்வேவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை

தென்னக ரயில்வேவுக்குச் சொந்தமான அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை விதித்துள்ளது. அதில் ரயில்வேவுக்கு விதிவிலக்கு அல்ல என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்த பிரபாகர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "உயர் நீதிமன்றத் தடையை மீறி ரயில் நிலைய வளாகங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்க மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்யத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தென்னக ரயில்வேவுக்குச் சொந்தமான அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே இடங்களில் பிளக்ஸ், பேனர்கள், கட் அவுட்கள் வைக்கத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, "ஏற்கெனவே தமிழக அரசு பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை விதித்துள்ளது. அதில் ரயில்வேவுக்கு விதிவிலக்கு அல்ல. ரயில் நிலையங்கள், ரயில்கள் போன்றவை பொதுமக்களின் வசதியான பயணத்திற்காகவே தவிர சங்கடங்களை உருவாக்குவதற்கு அல்ல.

தொழிற்சங்கங்களோ, கூட்டமைப்புகளோ அதன் நிர்வாகிகளோ இந்த உத்தரவுகளை மீறினால், அவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை தென்னக ரயில்வே 3 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT