விழுப்புரம்
பஞ்சமி நிலங்களை தொழிற்பேட்டை என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக அரசே கையகப்படுத்தி வருகிறது என, தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தொடர்பான விவாதங்கள் பேசப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விழுப்புரத்தில் உள்ள தலித் மண்ணுரிமை கூட்டமைப்பின் அமைப்பாளர் நிக்கோலஸிடம் கேட்டபோது, "பஞ்சமி நிலங்கள் சென்னை மாகாணத்தில் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டதாக அரசாணை எண்; 1010/ 30.09.1892 ஆம் தேதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களை தலித் அல்லாதவர்கள் கிரையம் பெற இயலாது.
தலித் மக்கள் தங்களுக்குள் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நாளடைவில் விதியை மீறி இந்த நிலங்களை தமிழகமெங்கும் அனைத்து சாதியினரும் கையகப்படுத்தி தங்கள் பெயருக்கு காலகாலமாக பட்டா மாற்றம் செய்து கொண்டனர்.
குறிப்பாக தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெலாகுப்பம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள உணவு பூங்காவுக்கு அருகாமை கிராமங்களில் உள்ள பஞ்சமி நிலங்கள் கையக்கப்படுத்தப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 12,200 ஏக்கர் பஞ்சமி நிலங்களில் 3 ஆயிரம் ஏக்கர் மட்டுமே தலித் மக்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் நிலவுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு, அரக்கோணம் அருகே பனப்பாக்கம் என தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்ட இடங்கள் அருகே உள்ள பஞ்சமி நிலங்களை அரசே கையகப்படுத்தியுள்ளது. இப்படி தமிழகமெங்கும் பஞ்சமி நிலங்களை அரசே கையகப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டுமென எங்கள் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் கிராமத்தில் நிலமற்ற தலித் மக்களுக்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் கொடுக்கப்பட்டு ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 66 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் உழுது விதை விதைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு பேசும்போது, ஆங்கிலேயர் காலத்திலேயே தலித் மக்களுக்கு பிஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. நாளடைவில் ஆதிக்க சக்திகள் கைப்பற்றி அனுபவித்து வருகின்றனர். இதனை மீட்டு மீண்டும் தலித் மக்களுக்கு வழங்க வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளாக பஞ்சமி நிலங்களை மீட்க போராட்டம் நடந்து வருகிறது. பஞ்சமி நிலங்கள் தலித் மக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசு விதி உள்ளது. ஆனால் ஆதிக்க சக்தியினர் கைப்பற்றியுள்ளனர். எனவே பஞ்சமி நிலங்களை மீட்டு மீண்டும் தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் தொடரும் என்றார்.
அதன்பின் இந்த நிலங்களை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் உடனே பணிமாறுதல் செய்யப்பட்டனர். இந்த நிலங்களை மீட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என நிக்கோலஸ் தெரிவித்தார்.