குப்பை கலந்திருந்ததாக கூறப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலுடன் தேவி உள்ளிட்டோர். படங்கள்: இரா.கார்த்திகேயன். 
தமிழகம்

கர்ப்பிணிக்கு செலுத்திய குளுக்கோஸ் பாட்டிலில் குப்பை: கணவர் உள்ளிட்ட உறவினர்கள் புகார்

செய்திப்பிரிவு

திருப்பூர்

கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் குப்பை இருந்ததாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஜெகன் (28), தேவி (24). கடந்த சில மாதங்களாக, திருப்பூர் ஊத்துக் குளி சாலை 2-வது ரயில்வே கேட் பகுதியில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்தனர். தேவி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். வீட்டில் இருந்தபோது, தேவிக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஊத்துக்குளி சாலையிலுள்ள நகர்ப்புற அரசு தாய், சேய் நல விடுதிக்கு தேவி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தேவிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் குப்பை இருப்பதை கண்டு, அவர் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக கணவருக்கும் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவரும், உறவினர்களும் மருத்துவரிடம் முறையிட்டும் உரிய பதில் இல்லை.

இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் தம்பதி கூறும்போது, ‘‘அரசு மருத்துவமனையை நம்பி சிகிச்சை எடுக்க வந்தோம். தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று பார்க்க வசதி இல்லை. குப்பை கலந்த குளுக்கோஸ் பாட்டில் ஏற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில் முழுமையாக ஸ்கேன் செய்து பரிசோதிக்க வேண்டும்'’ என்றனர்.

திருப்பூர் மாநகர நல அலுவலர் பூபதி கூறும்போது, ‘‘தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாகதான் குளுக்கோஸ் பெற்று வருகிறோம். இதுவரை குறைபாடு எதுவும் வந்ததில்லை. தற்போது பஞ்சு மாதிரி கழிவுகள் கலந்திருப்பதாக கூறப்படும் குளுக்கோஸ் பாட்டிலும், மற்ற பாட்டில்களும் திருப்பி அனுப் பப்படும். ஆய்வு செய்யப்பட்டு பதில் அளிக்கப்படும். துறைரீதியி லான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்படும்'’ என்றார்.

SCROLL FOR NEXT