சென்னை
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் லோக்கல் கவர்மென்ட் டைரக்டரி, ஏரியா புரோபைலர், சோசியல் ஆடிட் உள்ளிட்ட 10 தகவல் தொழில்நுட்ப முறைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் முதன்மை மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு, இ-பஞ்சாயத்து புரஸ்கர் விருதை மத்திய அரசு கடந்த அக்.23-ம் தேதி வழங்கியது.
மேலும், தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது, சேலம் மாவட்டத்துக்கும், ஒன்றிய அளவில் ஈரோடுமாவட்டம் பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வழங்கப்பட்டது.
ஊராட்சிகள் அளவில் சேலம் - கோனூர், கோவை - மத்வராயபுரம், நாமக்கல்- வெள்ளாள பாளையம், மதுரை - கோவில்பாப்பாக்குடி, திருவண்ணாமலை- எஸ்.யு.வனம் ஆகிய 6 கிராம ஊராட்சிகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
இதுதவிர, வலுவான கிராம சபை மூலம் சிறப்பான சாதனை புரிந்ததற்காக நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ கிராமசபை தேசிய விருது திருப்பூர் மாவட்டம் ராவணப்புரம் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் கிராம ஊராட்சிக்கு குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது என மொத்தம் 12 தேசிய விருதுகளை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
மேலும், கடந்த அக்.2-ம் தேதி தேசிய அளவில் ஊரக தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில் தூய்மைப் பணிகள், தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டியது, அங்கன்வாடிகள், பள்ளிகள் தூய்மை பராமரிப்பு ஆகியவற்றில் ஒட்டுமெத்த சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. தமிழகத்துக்கு மத்திய அரசின் சிறந்த மாநிலத்துக்கான தேசிய விருது மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் பிரதமர் மோடியால் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிறந்த ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட 12 தேசியவிருதுகளை முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, தலைமைச் செயலர் கே.சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இருந்தனர்.