விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே தேரோட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒரு பிரிவினர் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என சமூக நீதிப் பேரவை தலைவர் பாலு தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம் அருகே உள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தில் கடந்த சனிக் கிழமை இரவு இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் தேரோட்ட விழாவுக்கு தயாராக இருந்த தேர் தீயிட்டு கொளுத்தப் பட்டது. மேலும், 4 வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. தடுக்க முயன்ற 10-க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்தனர். இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி ஊருக்குள் நுழைந்த போலீஸார், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அந்த கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக 70 பேரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், சமூக நீதிப் பேரவைத் தலைவர் பாலு தலை மையிலான உண்மை அறியும் குழு வினர் நேற்று சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த எதிர் தரப்பி னரை சங்கராபுரம் வரவழைத்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.
இதையடுத்து சமூக நீதி பேரவைத் தலைவர் பாலு நிருபர்களிடம் கூறும்போது, “இந்த கிராம தேரோட்டம் தொடர்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற் கிடையே மாவட்ட நிர்வாகம் தேரோட்டம் நடத்த முடிவெடுத்த தால் இரு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
போலீஸார் பிரச்சினையை சரியான முறையில் கையாண்டு இருந்தால் வன்முறையை தவிர்த்து இருக்கலாம். சுமார் 300 வீடுகளுக்குள் போலீஸார் புகுந்து குழந்தைகள், முதியவர்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட் களை அடித்து நொறுக்கி உள்ளனர். இது தொடர்பாக 2 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போலீஸார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மேலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.