சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள். 
தமிழகம்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்திய ரூ.2.24 கோடி தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிப்பறையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.2.24 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். துபாயில் இருந்து வந்த விமானங்கள் மற்றும் அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். இந்நிலையில், துபாயில் இருந்து சர்வதேச விமானமாக புறப்பட்ட விமானம் டெல்லி வந்து, பின்னர் உள்நாட்டு விமானமாக நேற்று சென்னைக்கு வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்ததில் தங்கம் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து, சந்தேகமடைந்த அதிகாரிகள் விமானத்துக்குள் சோதனை செய்தனர். அப்போதுவிமானத்தின் கழிப்பறையில் 10 பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது, ரூ.2.24 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், துபாயில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் பறிமுதல்இதேபோல் துபாயில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த அகமது குட்டி என்பவரிடம் ரூ.19.60 லட்சம் மதிப்பிலான 508கிராம் தங்கம், கோலாலம்பூர்விமானத்தில் வந்த அப்துல் ரகுமான் என்பவர் கடத்தி வந்த ரூ.9.55 லட்சம் மதிப்பிலான 258 கிராம்தங்கம், சஷ்மீர் அசாரிக்கண்டி என்பவரிடம் ரூ.2.16 லட்சம் மதிப்பிலான 432 சிகரெட் பாக்கெட்கள்பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT