சென்னை
அரசு அனுமதித்துள்ள அளவுக்கு அதிகமாக வெங்காயம் வைத்திருந்தாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெங்காயம் விளையும் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக விலை உயர்வு குறித்து தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் தயானந்த் கட்டாரியா தலைமையில் உயர் அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லறை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும் வெங்காயம் கையிருப்பு வைத்து இருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றம் சென்னையில் உள்ள நுகர்பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களில் தரமான வெங்காயத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் திங்கள்கிழமை பிற்பகல் நாசிக் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
நாசிக் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் தற்காலிக வெங்காய விலை உயர்வானது கட்டுக்குள் கொண்டுவரப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் கூட்டாக தெரிவித்து உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.