சென்னை
பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்து இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் சிறப்பு செயற்குழுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ். அழகிரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கே.வி.தாமஸ், காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது:கடந்த ஐந்தரை ஆண்டு கால மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் உற்பத்தி குறைவு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணப் பற்றாக்குறை, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்தியாவின் மக்கள் தொகையை மக்கள் சக்தியாக பயன்படுத்துவதற்குப் பதிலாக சீரழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் உள்நோக்கத்தோடு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளில் வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இதனால் நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணமான பாஜக அரசைக் கண்டித்து இன்று (நவ.5) முதல் 15-ம் தேதி வரை மாவட்ட, நகர, வட்டார, பேரூர் அளவில் அளவில் மாபெரும் மக்கள் இயக்கத்தை நடத்துமாறு காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, நவம்பர் 5 (இன்று) முதல் 15-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களை கண்டறிந்து அவர்களின் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைமைக்கு மாவட்டத் தலைவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.