மதுரை
ஜனவரி 15-ம் தேதி முதல் கீழடி, கொந்தகை, மணலூர் உள்பட 4 இடங்களில் அகழாய்வு தொடங்கும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இன்று (திங்கள்கிழமை) கீழடி அகழாய்வு தொல்பொருட்களின் கண்காட்சியினை அமைச்சர்கள் பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர், தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 6800 பொருட்களையும் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் 3 அரங்குகளில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். தமிழக முதல்வரால் மூன்று நாட்களுக்கு முன் திறந்துவைக்கப்பட்டது. உலகத்தரமிக்க அருங்காட்சியகம் அமைப்பதற்கு ‘டீசர்’ போல் விர்ச்சுவல் ரியாலிட்டி அமைத்துள்ளோம்.
ரூ. 12.12 கோடி மதிப்பில் கீழடிக்கு அருகிலுள்ள கொந்தகையில், அதாவது மதுரை விமான நிலையத்திலிருந்து சுமார் 12 கிமீ தூரத்தில் உள்ள இடத்தில் இன்னும் ஓர் ஆண்டில் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படும்.
அந்த அருங்காட்சியகம் மூன்று அடுக்குகள் உள்ளது போல் அமைக்கப்படும். மேலும், அகழாய்வு இயற்கையாக நடப்பதை காட்டும் அளவுக்கு அருங்காட்சியகமும் அமைக்கப்படும்.
2020 ஜனவரி 15ம் தேதி முதல் கீழடி, மணலூர், கொந்தகை உள்பட ஒட்டியுள்ள 4 கிராமங்களில் அகழாய்வு தொடங்கவுள்ளது. அகழாய்வு ஜனவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது.
ஒருகாலத்தில் முன்னர் மதுரையின் மணலூர் உள்பட கொந்தகை, நான்கு கிராமங்களில் அதுபோக 3 கிராமங்களில் ஆதிச்சநல்லூர், 1802ல் பிரஞ்ச் பிரான்ஸ் தமிழக அரசு ஆய்வுகள் திருநெல்வேலி மாவட்டம் சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழாய்வுகள் 15-ல் தொடங்கவுள்ளன.
கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வு மத்திய அரசால் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை இரு வாரங்களுக்கு முன்னால் என்னிடம் கொடுத்தனர். அதனை தமிழாக்கம் செய்து விரைவில் வெளியிடப்போகிறோம்.
கீழடியில் கண்டெடுத்த 10 ஆயிரம் பொருட்களை முழுமையாக தருவதாக என மத்திய தொல்லியல் துறை கூறியிருக்கிறது. அதையும் சேர்த்தும், தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் சேர்த்து உலகத் தரத்திலான அருங்காட்சியகம் இன்னும் ஓராண்டில் தமிழக அரசு சாதித்துக்காட்டும். அதற்காக உலக அளவிலான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதுவரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கண்காட்சியை மேம்படுத்தும் பணியும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
இதே வளாகத்தில் இன்னும் 3 மாதத்தில் தமிழக முதல்வர் அறிவித்த தமிழர் பண்பாட்டு மையம் அமையவுள்ளது. இந்த தமிழ்ச்சங்கம் நாள்தோறும் 10 ஆயிரம் பேர் வரக்கூடிய இடமாக உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.