சிவகங்கை
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச நினைப்பது காட்டுமிராண்டித்தனமானது என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார். மேலும், ‘ரஜினிக்கு விருது கொடுத்ததை விமர்சிக்க சீமானுக்கு தகுதியில்லை’ என்றும் அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குணப்பனேந்தலில் இருத்தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இருத்தரப்பினர் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து, கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கருணாஸ் எம்எல்ஏ சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதனிடம் மனு கொடுத்தார்.
அதில், குணப்பனேந்தல் பிரச்சினையில் தொடர்புடையவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். மற்றவர்களை தொந்தரவு செய்யக் கூடாது. என அவர் கூறியிருந்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "‘ரஜினிக்கு விருது கொடுத்ததை விமர்சிக்க சீமானுக்கு தகுதியில்லை. சீமான் எல்லாவற்றையும் அரசியல் ஆக்குவதிலேயே குறியாக உள்ளார். மதம் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது. அதை வைத்து அரசியல் செய்வது நாகரிகமற்ற செயல்.
தனது பன்முகத் தன்மையால்தான் இந்தியா உலக அளவில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவருக்கு காவி சாயம் பூச நினைக்கும் ஹெச்.ராஜா போன்றவர்களின் எண்ணம் காட்டுமிராண்டித்தனமானது”.
இவ்வாறு அவர் கூறினார்.