சென்னை
திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியவர்கள், மறைந்த பின்பும் வள்ளுவம் வாழும் என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் சாணம் வீசியும் கருப்புக் காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்பு செய்துள்ளனர். இது குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்
இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி இன்று (நவ.4) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால் அதைச் செய்த மூடர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையைச் சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போன பின்பும் வள்ளுவம் வாழும்," என பதிவிட்டுள்ளார்.