திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நெல்லையில் இன்று (திங்கள்கிழமை) காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 32 மி.மீ. மழை பதிவானது.
மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:
திருநெல்வேலி- 29, சேர்வலாறு, கடனாநதி அணையில் தலா 27, சங்கரன்கோவில்- 22, தென்காசி- 14, பாபநாசம், சிவகிரியில் தலா 13, ராமநதி அணை, அடவிநயினார் கோவில் அணையில் தலா 12, குண்டாறு அணை, ஆய்க்குடி- 11.80, சேரன்மகாதேவி- 10.20, நம்பியாறு அணை, செங்கோட்டையில் தலா 10, அம்பாசமுத்திரம்- 7, கருப்பாநதி அணை- 3.50, ராதாபுரம்- 2.20, மணிமுத்தாறு- 2.
தொடர் மழையால் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவரும் பரவலாக நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
143 அடி உயரம் உள்ள பாபநாசம் அணை நீர்மட்டம் 133.10 அடியாக இருந்தது. 156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.19 அடியாக இருந்தது. 118 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61.90 அடியாக இருந்தது. 133.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 129.25 அடியாக இருந்தது. இந்த அணையும் சில நாட்களில் நிரம்பும் நிலையில் உள்ளது.
சிறிய அணைகளான கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய 4 அணைகள் ஏற்கெனவே நிரம்பியதால், அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலையில் வெள்ளம் குறைந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.