வைகோ - பிள்ளையார்பட்டியில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை 
தமிழகம்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: நஞ்சினும் கொடிய செயலைச் செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது; வைகோ

செய்திப்பிரிவு

சென்னை

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று (நவ.4) வெளியிட்ட அறிக்கையில், "தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில், உலகப் பொதுமறை தந்தவரும், மனிதகுலத்துக்கே வழிகாட்டக் கூடிய ஒளிச்சுடரை வழங்கியவருமான திருவள்ளுவர் சிலை மீது சாணத்தைக் கொட்டி இருக்கின்றார்கள். இச்செய்தி கேட்ட நொடியில், இருதயத்தில் சூட்டுக்கோல் நுழைத்தது போன்று, உடலும் உள்ளமும் பதறுகின்றது.

நஞ்சினும் கொடிய செயலைச் செய்த பாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. தீச்செயலைச் செய்தவர்கள் மனித சமூகத்தில் நடமாடத் தகுதி அற்றவர்கள். திருக்குறள் காலத்தால் அழிக்க முடியாதது. மனிதகுலம் வாழும் வரை அறநூலாகவே வாழும். திருவள்ளுவரின் புகழ் இந்த மண்ணும் விண்ணும் இருக்கும் வரையில் நீடிக்கும்.

நெஞ்சம் கொதிக்கின்றது. முக்கடல் சங்கமத்தில் விண்முட்டும் திருவள்ளுவர் சிலை எழுப்பினார் கருணாநிதி. இது உலகின் பல நாடுகளில், பல மொழி பேசுவோர் திருவள்ளுவர் சிலை எழுப்பி தங்களை வாழ வழிகாட்டும் அறநெறி மாண்பாளராகப் போற்றுகின்றனர். இக்கொடியோர் செயலால் தமிழகம் வெட்கித் தலைகுனிகின்றது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை என்றார் வள்ளுவர். தன்னை வெட்டிக் குழி பறிப்பவனையும் தாங்கி நிற்கின்றது நிலம் என்றார். அதுபோல இகழ்ச்சியையும் தாங்கிக்கொள்ள வேண்டும் என்றார். எனினும் மன்னிக்க முடியாத இம்மாபாதகச் செயலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT