மதுரை
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் சமூக ஆர்வலர் முகிலர் இன்று (திங்கள்கிழமை) மதுரை மாவட்ட குற்றவியல் 4-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கில் இன்று மதுரை மாவட்ட குற்றவியல் 4-வது நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஏற்கெனவே வழக்கு ஒன்றில் திருச்சி சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் மதுரை நீதிமன்றத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டார்.
வழக்கு விசாரணை நடைபெற்றதையடுத்து வழக்கை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய, மாநில அரசுகள் மீது விமர்சனம்..
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே முகிலன் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேனில் இருந்தபடியே முகிலன் "தமிழகத்தில் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.
விவசாயத்தில் ஒப்பந்ததாரர்களைக் கொண்டுவந்தால் தமிழகம் சோமாலியா போல் ஆகிவிடும். வேளாண்மை ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும். தமிழக அரசின் கால்நடை இனப்பெருக்கும் மசோதா மூலம் கால்நடைகள் இனப்பெருக்கத்துக்குகூட பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து விந்தணு ஊசி போடும் நிலையை உண்டாக்கியுள்ளது.
குழந்தை சுஜித்துக்காக நாம் எல்லோரும் கண்ணீர் சிந்தினோம். ராக்கெட்டுகளை செலுத்தும் இந்நாட்டில் நம் சுஜித்தைக் காப்பாற்ற ஒரு தொழில்நுட்பம் இல்லை" என்று கோஷமிட்டார்.