திருப்பத்தூர்
சசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிமுகவில் இனி எப்போதும் இடமில்லை என வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் திருப்பத்தூர் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய குளிர்சாதன பேருந்து இயக்க விழா திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் ஒரு புதிய குளிர்சாதன பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. பணிகள் முடிவடைந்து சாலைகளை சீரமைக்க அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. அதன்பேரில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும். அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும்.
சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை ஆன உடன் அதிமுகவில் மாற்றம் வரும் என கூறுவதை ஏற்க முடியாது. எந்த மாற்றமும் வராது. சசிசலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை எதிர்த்து நாங்கள் தர்மயுத்தம் நடத்தினோம். அம்மா வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்த சசிகலா குடும்பத்தினரை நாங்கள் ஒரு போதும் ஏற்கமாட்டோம். அதிமுகவில் இனி எப்போதும் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இடமில்லை.
அமமுக முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து கட்சி பணியாற்றி வருகின்றனர்’’ என்றார்.