தமிழகம்

மீனவர், வெளிநாட்டு வாழ் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசுடன் பேச்சு நடத்த முயற்சி நடக்கிறது: வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

மீனவர்கள் பிரச்சினை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எடுத்து வருகிறோம் என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் கூறினார்.

மத்திய வெளியுறவுத் துறைஇணை அமைச்சராக பதவியேற்றுள்ள முரளிதரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், புதிய இந்தியா அமைப்பு சார்பில் ‘சந்திப்போம், வாழ்த்துவோம்' என்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முரளிதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: நாட்டில் எந்தப் பகுதிக்கும் சென்று நான் ஒரு இந்தியன் என்று சொல்லும் பெருமை பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் கிடைத்தது.

மீனவர் பிரச்சினை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும்தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கடந்த முறை தமிழகத்தில் பாஜக சார்பில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மக்களின் குறைகளை தீர்த்து வைத்தார். தற்போது, எனக்கு இந்த வாய்ப்புகிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக, தமிழக மக்கள் தங்களுக்கு தேவையானதை என்னிடம் கோரிக்கைகளாக தெரிவிக்காமல், உரிமையுடன் தெரிவிக்க வேண்டும். என்னால் முடிந்த அளவுக்கு தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நிச்சயம் செய்து தருவேன்.

ஜம்மு காஷ்மீருக்கான 370-வதுபிரிவை மத்திய அரசு ரத்து செய்ததன் மூலம், அனைத்து மாநிலங்களும் ஒரே அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூகநீதியை ஆதரித்து பேசும் அரசியல் கட்சிகள், காஷ்மீரில் வழங்கப்பட்டுள்ள சமூகநீதியை எதிர்க்கின்றன. இது முரணாக உள்ளது. இவ்வாறு முரளிதரன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், நாட்டியக் கலைஞர் கோபிகா வர்மா, திரைப்பட நடிகரும் இயக்குனருமான சுரேஷ் மேனன், இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசங்கர் மேனன், சர்வதேச நாயர் சேவா சமாஜத்தின் தலைவர் ஜெய்சங்கர் உன்னித்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT