எஸ்.கோபாலகிருஷ்ணன்
திருவாரூர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அபராதத் தொகையை வசூலிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி குமாரசாமி, குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். அதன் பின்னர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
அதன்பிறகு, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 5.12.2016-ல் ஜெயலலிதா உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் 14.2.2017-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால், தீர்ப்பின்போது ஜெயலலிதா குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனால் கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை யாரிடம் வசூலிப்பது என கேட்கப்பட்டிருந்தது. இந்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 28.9.2018-ல் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகள் என்னவாகும் என்கின்ற சூழ்நிலை இருந்த நிலையில், தற்போது அவரது சொத்துகள் அனைத்தையும் கணக்கெடுக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த அறிக்கையை விரைவாக அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்கும்படி மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து, வட்டாட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துகள் இருப்பின் அது குறித்த விவரத்தையும், இல்லை என்றால், ‘இனம் இல்லை’ என குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் (1998 - 2001) வாதாடிய சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.வி.சோமசுந்தரம் கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பு வெளிவந்தபோது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் மட்டுமே அவரது பெயர் தீர்ப்பில் இடம்பெறவில்லை. மற்றபடி ஏற்கெனவே பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தண்டனை பெற்ற பின்னர் குற்றவாளி உயிரோடு இல்லை என்றாலோ அல்லது தலைமறைவாகி விட்டாலோ ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வருவாய் மீட்பு சட்டத்தின்படி (revenue recovery act ) சொத்துகளை கணக்கெடுப்பு செய்து, அதனை பொது ஏலம் நடத்தி நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறைவேற்ற சட்டத்தில் வழிவகை உள்ளது. அந்த அடிப்படையில்தான், தற்போது இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.