விழுப்புரத்தில் இளைஞரின் கை, கால் துண்டிக்கப்பட்டது தொடர்பான புகாரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் செந்தில் (28). மினி பஸ் டிரைவரான இவர் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் காயங்களுடன் கிடந்தார். உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். நீண்டநாள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.
எஸ்பியிடம் புகார்
இந்நிலையில், விழுப்புரம் எஸ்பியிடம் அண்மையில் புகார் மனுவை செந்தில் அளித்தார். அதில், பள்ளி மாணவி ஒருவரை தான் காதலித்ததாகவும், அந்த மாணவி வீட்டுக்கு தெரிந்ததால் அந்த மாணவி மூலமாகவே என் மீது விழுப்புரம் மேற்கு போலீஸில் புகார் அளித்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் தன்னை கை, காலை துண்டித்து ரயில்வே தண்டவாளத்தில் வீசியதாகவும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் சொந்த வீட்டை காலி செய்து விட்டு விழுப்புரம் கே.கே. சாலையில் வாடகை வீட்டில் வசிக்கிறோம் என்றும் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதோடு தனது கை, கால்களை துண்டித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து டிஎஸ்பி வீரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை தொடர்பாக, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
தண்டவாளத்தில் செந்தில் அடிபட்டு கிடந்தபோது அவரை மருத்துவமனையில் சேர்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரித்தோம். அப்போது, ரயிலில் செந்தில் அடிபட்ட அடையாளங் கள் இருந்ததாக கூறினார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் ரயிலில் அடிபட்டதாக பதிவு செய்துள்ளனர். மருத்துவர்கள் கொடுத்த மருத்துவ சான்றிலும், ‘கை, கால் நசுங்கி துண்டாகியுள்ளது என்றும் துண்டான உடல் பாகம் சேதமடைந்துள்ளதால் மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியவில்லை’ என குறிப்பிட்டுள்ளனர்.
தொடர் விசாரணை
மேலும் சம்பவம் நடந்து இவ்வளவு நாட்கள் கடந்தும் செந்தில் தரப்பில் இருந்து யாரும் போலீஸில் புகார் கொடுக்க வில்லை. இப்போதுதான் அவர் புகார் கொடுத்துள்ளார். அதில், ஒரு மாணவியை காதலித்ததாகவும், அந்த பெண்ணின் ஆட்கள்தான் தன்னை தாக்கி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் சொன்ன ஊரில் அவர் குறிப்பிட்ட பெயரில் எந்த மாணவியும் இல்லை. எனவே, தவறான தகவலை செந்தில் கொடுத்துள்ளாரா என சந்தேகம் அடைந்துள்ளோம். எனினும், உண்மை நிலையை கண்டறிவதற்காக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு (ஐபிசி 307) பதிவு செய்துள்ளோம்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.