தமிழகம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரிடம் தமிழக அரசின் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கல்

செய்திப்பிரிவு

திருச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் வில்சனின் பெற்றோருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது.

மணப்பாறையை அடுத்தநடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜூக்கு சொந்தமான நிலத்தில் இருந்த பயனற்ற ஆழ்துளைக் கிணற்றில் அவரது 2 வயது குழந்தை சுஜித் வில்சன் அக். 25-ம் தேதி மாலை தவறி விழுந்தார்.

குழந்தையை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அக்.29-ம் தேதி அதிகாலை குழந்தை சுஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தமிழகமுதல்வர் பழனிசாமி நடுக்காட்டுப்பட்டியில், சுஜித் வில்சனின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் முதல்வர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் அறிவித்தபடி, முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை குழந்தையின் பெற்றோர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரி ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று வழங்கி, ஆறுதல் கூறினார்.

SCROLL FOR NEXT