தமிழகம்

மதுரை தமிழ்ச் சங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சியில் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

மதுரை

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்லியல் துறை சார்பில் 5 கட்ட அகழாய்வு நடந்துமுடிந்துள்ளது. சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டதொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்ததற்கான கீறல் எழுத்து, பானை ஓடுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் செங்கல், உறை கிணறு, சுற்றுச்சுவர், நீர் மேலாண்மை தொடர்பான முக்கிய பொருட்கள் கிடைத்துள்ளன.

இவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும். கீழடி அகழாய்வு பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனத் தொல்லியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் அகழாய்வுப் பொருட்களை பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பார்க்க தற்காலிக அருங்காட்சியகத்துக்கு தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, மதுரை சட்டக் கல்லூரி அருகில் உள்ள உலக தமிழ்ச் சங்கத்தின் முதல் மாடியில் 3 அறைகளில் அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தற்காலிகக் கண்காட்சிக் கூடங்களை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள்செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், பாண்டியராஜன், தொல்லியல் துறை செயலர் உதயசந்திரன், மதுரை ஆட்சியர் டிஜி.வினய், உலக தமிழ்ச் சங்க இயக்குநர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கீழடி அகழாய்வின் தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் கூறியதாவது:தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 84 குழிகளில் 6,820 தொல்பொருட்கள், பெரிய அளவிலான கட்டிடப் பகுதிகள் கிடைத்துள்ளன. தமிழ் எழுத்து பொறித்த மட்கல ஓடுகள், குறியீடு, சங்கு வளையங்கள், காசுகள், சுடு மண் விலங்கு, மனித உருவங்கள், விளையாட்டுக் காய்கள் கிடைத்தன.

4, 5-ம் கட்ட ஆய்வில் கிடைத்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இங்கு பொதுமக்கள், மாணவர்கள் பார்வைக்காக 3 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. காலை11 முதல் இரவு 7 மணி வரைஅனைத்து நாட்களிலும் பார்க்கலாம். கட்டணம் எதுவுமில்லை. தொல் பொருட்கள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, 5 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காலிகமாகத் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை, மக்கள் வருகையைப் பொறுத்து நீட்டிக்க அரசு முடிவு செய்யும் என்றார்

SCROLL FOR NEXT