சென்னை
காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் அம்மா படப்பிடிப்பு தளத்தை அமைக்க, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பையனூரில் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் அருகில் அரங்கம் கட்டித் தருமாறு தென்னிந்திய திரைப்பட தொழி லாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அங்கு அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வர், ரூ.1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து பையனூரில் அமைக்கப்படவுள்ள அம்மா படப்பிடிப்பு தளத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பா.பென்ஜமின், தலைமைச் செயலர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ.சங்கர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிறகு செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “திரைப் படத் துறையில் வெளிப்படையான நிர்வாகம் வேண்டுமென்று அனைவரும் கருதுகின்றனர். எனவே ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசுக்கு வரும் வருவாயின் ஒரு பகுதியை திரைப்படத் துறைக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று இந்த படபிடிப்புத் தளத்தை திறக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.