சென்னை
வல்லபபாய் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்களை வைத்து மக்களை பாஜக ஏமாற்றுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவு நாள் மற்றும் முன்னாள் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலின் 144-வது பிறந்த நாள் தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நேற்று அனு சரிக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திரா காந்தி, படேல் உருவப்படங்களுக்கு கே.எஸ்.அழகிரி, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: பாஜகவுக்கும் நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களிடம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர் கள் யாரும் இல்லாததால் வல்லப பாய் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு பழிவாங்கி வருகிறது. ப.சிதம்பரம் எதற்கும் அஞ்சாமல் மன வலிமையுடன் எதிர்கொண்டு வருகிறார். ஆனால், அவரது உடல் நலிவடைந்து வருகிறது. அரசு மருத்துவர்கள் போராட்டத்தை அதிமுக அரசு மிரட்டுவது சரியல்ல. அரசு மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.