சென்னை
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் மரணமடைந்தார். மருத்துவர்களின் போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் பெண் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை குறித்து டீன் விளக்கிக் கூறிய பின்னர் இறந்த பெண்ணின் உடலை அவரது உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.
4 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தினாலும், அறுவை சிகிச்சை, சிசேரியன், அவசர சிகிச்சை போன்றவற்றுக்குத் தடை ஏற்படாமல் மருத்துவர்கள் பார்த்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில் அமைந்தகரையில் வசிக்கும் சலீம் என்பவரின் மனைவி ஷப்னா, காய்ச்சல் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இரவு 10 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவர்கள் யாரும் இல்லை. சரியான சிகிச்சை இல்லாததால் ஷப்னா உயிரிழந்தார் என உறவினர்கள் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இஸ்லாமிய அமைப்பினரும் திரண்டனர்.
பின்னர் டீன் வசந்தா மணி ஷப்னாவின் உறவினர்களை அழைத்துப் பேசினார். ஷப்னா கடந்த சில நாட்களாக காய்ச்சலில் இருந்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டுவரும்போதே அவரது ரத்தத் தட்டுகள் எண்ணிக்கை 20 ஆயிரம் மட்டுமே இருந்தது என அதற்கான ரிப்போர்ட்டுகளைக் காண்பித்தார்.
20 ஆயிரம் மட்டுமே இருந்தால் நோயாளி பிழைப்பது மிகக்கடினம். ரத்தத்தட்டு எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும். ஆனால் அவர் உடல்நிலை மேலும் மோசமாகி மரணம் ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது. மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தோம் என்பதை டீன் வசந்தா மணி விளக்கிக் கூறினார். மருத்துவ சிகிச்சை குறித்த விவரங்கள் காட்டப்பட்டு, மருத்துவமனை டீன் கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் பின்னர் ஷப்னாவின் உடலைக் கொண்டு சென்றனர்.
இதனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முன்னர் நிலவி வந்த பரபரப்பு குறைந்தது.