அண்ணா அறிவாலயம்: கோப்புப்படம் 
தமிழகம்

திமுக பொதுக்குழு கூட்டம் நவ.10-ம் தேதி கூடுகிறது: க.அன்பழகன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை

திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்.6-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் காரணமாக, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (அக்.31) வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த செப்டம்பர் 6 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம், வரும் நவம்பர் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்" என க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், திமுகவின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சித் தேர்தல், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT